Wednesday, August 11, 2010

"மறக்க முடியாத மாமனிதர்கள்"

ஜாண் ஹண்ட் 1812 - 1848

19 ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலுள்ள லின்கோலன்சிர் என்ற சிற்றூரில் வாழ்ந்த ஜாண் ஹண்ட் தனது பத்தாவது வயதிலேயே பள்ளிப் படிப்பை விட்டு, விவசாயியாக வேலை செய்ய‌த் துவங்கினார். தனது 17 வது வயதில் கதிர்களை அறுத்துக்கொண்டு, நிலத்திலிருந்து வரும்போது, அவனது நண்பர்கள், மெலிந்த, சத்து அற்ற ஆவனது கதிர்களைப் பார்த்து, கேலி செய்யத் தொடங்கினர். 'உனக்கு விவசாயமே வராது, தையல் கலையைக் கற்றுக்கொண்டு தொழில் செய்' என்று கேலி செய்தான் ஒருவன்.

மற்றவன் உன் தந்தையைபோல் ஒரு போர் வீரனாகவோ, கப்பலில் பணிபுரிபவனாக‌வோ மாறிவிடு என்றான். நல்ல‌ உயரமான‌ அதிக திடகார்த்த‌மான உடலைப் பெற்ற ஜாண் ஹன்ட், தனது நண்பர்களின் சொற்களில் உண்மை உள்ளது என்று உணர்ந்து, மெல்ல சிரித்துக்கொண்டே, ஒருவேளை நான் ஆப்பிரிக்கா தேசத்திற்குப் போர்வீரனாகச் சென்று என் தேசத்திற்குச் சேவை செய்வேன் என்றார். எந்த ஆபத்திற்கும் பயப்படாத, அஞ்சா நெஞ்சம் படைத்த ஜாண் ஹண்ட், ராணுவத்தில் சேருவதற்காக சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது நண்பனது வீட்டில் நடக்கும் ஜெபக்கூட்டத்திற்குச் சென்றான் ஜாண்.

இதுவரை ஜாண் வாழ்வில் கிறிஸ்தவ, ஆவிக்குரிய‌ வாழ்வு போன்ற ஆண்டவருக்க‌டுத்த காரியங்களுக்கு இடமே இல்லாதிருந்தது. பழைய நண்பர்களின் சகவாசத்தால் அதிகம் சோர்ந்தும் இருந்தார். இந்த ஜெபக் கூடுகைக்கள், பாடல்கள், செய்திகள், ஜெபங்கள் இவரது வாழ்வை மாற்ற ஆரம்பித்தது. கிறிஸ்துவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். ஆண்டவரது அன்பை உணர்ந்த ஜாண் ஆப்பிரிக்கா தேசத்திற்குப் போகவேண்டுமென்ற அவரது தீர்மானம், போர்வீரனாக அல்ல ஒரு மிஷனெரியாக அங்கு செல்வேன் என்ற வாஞ்சை வலுப்பெற்றது.

தனக்கு முன்னிருக்கும் உன்னத பணியைச் செய்ய, தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம், ஜாணை, கடினமாய் உழைப்பதற்கும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளவும், மேல் படிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள‌வும் செய்தது. ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்து கொண்டிருந்த ஜாண் தானே பல இடங்களில் ஜெபக்கூட்டங்களை நடத்தினார். அவரது எளிய வாழ்வு, தெளிவான செய்திகள் பலரை ஆண்டவருக்குள் வழிநடத்தியது. தனது நெருங்கிய ஆவிக்குரிய நண்பர்களிடம் தனது இலட்சியமான ஆப்பிரிக்கா தேசத்திற்கு மிஷனெரியாகப் போக விரும்புவதைச் சொன்னார். ஆனால் தான் எப்படிப் போகமுடியும்: படிப்பு அறவே தனக்கு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். அவரது நண்பர்கள் அதை சரிசெய்து விடலாம் என்று அவரைத் தைரியப்படுத்தி பல முயற்சிகள் செய்து ஹஸ்டனில் உள்ள மெதடிஸ்ட் வேதாகமக் கல்லூரியில் இரண்டு வருட படிப்பைப் படிக்க உதவி செய்தனர்.

பத்து வயதில் படிப்பை நிறுத்திய ஜாணுக்கு படிப்பு அதிக கடினமாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்கா தேசத்து தரிசனத்துடன், சோர்ந்து போகாமல் படித்தார். படிப்பை முடித்தவுடன் அவரது மிஷனெரி இயக்கத் தலைவர் "ஜாண் நீ உலகத்திலே மோசமான காட்டுமிராண்டி மக்கள் வாழும் பீஜீ தீவுகளுக்கு மிஷனெரிப்பணி செய்ய போகவேண்டும். அதற்கு நீ ஆயத்தமா? என்று கேட்டார். என் ஆண்டவர் அனுப்பும் எந்த இடத்திற்கும் நான் போக ஆயத்தம், எந்தத் தடையும் இல்லை என்று பதிலளித்தார். தனது வாழ்வில் மிஷனெரிப் பணிக்காக இடம் பீஜீ தீவுகளே! ஆப்பிரிக்கா இல்லை என்பதை அப்போது உணர்ந்து கொண்டார்.

பீஜீ தீவுகள்:

பசிபிக் மகா சமுத்திரத்தில் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் கிழக்குப் பகுதியிலுள்ள பீஜீ தீவு கூட்டங்கள் சிறு சிறு தீவுகளாகக் காட்சியளித்ததோடு மிகவும் பிந்தங்கிய நிலையிலும் இருந்தன. ஒவ்வொரு தீவையும் ஒரு குறுநில மன்னன் ஆண்டதால் மற்ற தீவு மன்னர்களுடன் அடிக்கடி போர் நிகழ்ந்தது. மக்களைக் கொன்று குவிப்பதுடன், மனித மாமிசத்தை உண்ணும் பழக்கமுமிருந்தது. பல மூடப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிய இவர்கள் இறந்த ஆவிகளுக்குப் பயந்தனர். கணவன் இறந்தவுடன், மனைவியையும் கொன்று அவனுடன் புதைத்து விடுவார்கள். அப்படி மனைவியைக் கொல்லாவிட்டால் கணவனின் ஆவி பூமியில் அலையும் என்பது இவர்களது மூட நம்பிக்கை. வியாதியஸ்தர்களையும், வயதானவர்களையும் பயனற்றவர்கள் எனக் கழுத்தை நெரித்தோ, மண்ணில் உயிருடன் புதத்தோ கொன்று விடுவார்கள். இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் மிஷனெரியாகச் செல்ல ஆயத்தமான ஜாண் ஹண்ட், அவருக்கு நியமிக்கப்பட்ட மணப் பெண்ணான ஹேனாவிடம் பீஜீ தீவுகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டு, நாம் அங்கு மிஷனெரியாகச் செல்ல வேண்டும் என்று அழைத்தபோது அவளும் தடையேதும் சொல்லாமல் சம்மதித்தாள்.

1838 ம் ஆண்டு மே மாதம் 8 ம் தேதி இங்கிலாந்து தேசத்தை விட்டு, ஆறு மிஷனெரிகளுடன் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியை நோக்கி கப்பற் பயணம் மேற் கொண்டனர் ஜாண்‍ ஹேனா தம்பதியினர். கஷ்டமான பயணத்தால் ஹேனா அதிக சுகவீனம் அடைந்தார். என்றாலும் தேவ கிருபையால் சுகம் பெற்று சிட்னி வந்தடைந்தனர். சிட்னியிலிருந்து ஒரு சிறிய மரக்கப்பலில் பீஜீ தீவிற்குப் புறப்பட்டனர்.

ஆனால் லாகம்பா என்ற தீவை ஜாண் தம்பதியினர் அடைந்தபோது ஜாணின் மிஷனெரி இயக்கத்தின் தலைவர் திரு. கார்கில் ஜாணைச் சந்தித்து ரீவா என்ற தீவிலுள்ள மிஷனெரி திரு. கிராஸ் அதிக சுகவீனமாக இருக்கிறார். அவரை ஆஸ்திரேலியாவுக்கு உடனே கொண்டுபோய், மருத்துவ உதவி செய்யவேண்டும். அதற்கு இருவர் அங்கு சென்று உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரீவாவிற்கு கப்பல் ஏறியது ஜாணில் குடும்பம், கப்பல் கேப்டன், தொலை நோக்கியில் கரையைப் பார்த்தபோது, மக்கள் ஆயுதங்களுடன் எதிர்ப்பு தெரிவிப்பது தெரிந்தது. கரைசேர நூறு மைலுக்கு அப்பாலே கப்பலை நிறுத்தி, இவர்களை ஒரு சிறு படகில் ஏற்றி அனுப்பினார் கேப்டன். ஜெபித்துக் கொண்டே சென்ற இவர்களை ஆண்டவர் பாதுகாத்து. திரு. கிராஸ் வீட்டை சுகமாக வந்தடையச் செய்தார். அதிக சுகவீனமாய் இருந்த கிராஸோ ஆஸ்திரேலியா வர மறுத்துவிட்டார். இந்தக் கொடூரமான மக்களை ஆண்டவரிடம் வழி நடத்தும் பெரிய பணி எனக்கு முன் உள்ளது. எனவே நீங்களும் குடும்பமாக எங்களுடன் இருந்து பணி புரியுங்களேன் என்று கேட்டுக் கொண்டார். ஜாணும் அதற்கு இசைந்து அவருடன் தங்கிப் பணிசெய்ய ஆரம்பித்தார். திரு. கிராஸின் உடல் நிலையும் முன்னேற ஆரம்பித்தது. ரீவா‍வில் இரு குடும்பமும் இணைந்து பணிபுரிய ஆரம்பித்தனர்.

முதலாவது அவ‌ர்க‌ள‌து பாஷையைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். ஆறு வாரத்தில் ஜாண் ஹண்ட் அந்த மொழியில் புலமை பெற்று, வேத கதைகளை பீஜீயின் மொழியில் எழுதி, கூடிவந்த மக்களுக்குப் போதித்தார். ஆர்வத்துடன் கேட்ட மக்கள், வெள்ளை மனிதன் நமது மொழியிலே நமக்குப் புரியும் படி எளிதாக உண்மையான ஆண்டவரைச் சொல்கிறார் எனக்கூறி ஆர்வம் காட்டினர். இதனால் விசுவாசிகளின் எண்ணிக்கை நாற்பதிலிருந்து நூறாக அதிகரித்தது. எதிர்ப்பும் பெருகினது. முதலாவது அங்கிருந்த குறுநில மன்னர்கள் மூலம் எதிர்ப்புகள் வந்தன. மக்கள் மிஷனெரிகளின் பின்னால் செல்வதை பார்த்து, தங்களது அதிகாரம் குறைந்துவிடும் என்று பயந்தனர். ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகளும், வழி தப்பி வந்த கடற் பிரயாணிகளும், ஊழியத்திற்கு அதிகத் தடைகளாக இருந்தனர். ஒருமுறை திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தபோது, மன்னனின் சகோதரன் கற்களை வீசி எல்லா மக்களையும் காயப்படுத்தினான். ஜாண் மீது ஒரு பெரிய கல் விழுந்து, கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார். இதனைத் கண்ட எதிர்ப்பாளர்கள் வெட்கப்பட்டுத் திரும்பி விட்டனர். தோல்விகண்ட எதிர்ப்பாளர்கள் மிஷன் வீட்டைக் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் புதிய விசுவாசிகளின் வீடுகளையும் சூறையாடி, அழித்துத் தரைமட்டமாக்கினார்கள். உபத்திரவத்தின் மத்தியிலும் ஒரு விசுவாசிகூட பின்வாங்காமல் விசுவாசத்தில் நிலைத்து இருந்தனர். ஜாணின் குடும்பத்திற்கு மரணமும், ஆபத்துக்களும் அதிக தூரம் இல்லை. ஆனால் ஜாணின் நல்ல திடகார்த்தமான உடல் அமைப்பு எந்த மனிதனையும் அவருடன் சண்டையிடத் தயங்க வைக்கும், எதற்கும் அஞ்சாமல் தைரியமாக நிற்கும் அவரது மனவலிமையால் காட்டு மிராண்டிகள் கூட அவரை எதிர்க்க முடியவில்லை. தேவனது பாதுகாப்பு அவருக்கு எப்போதும் இருப்பதை உணர்ந்தார். ரீவாவில் ஜாணின் ஆறுமாத ஊழியத்தால், அப்பகுதி மன்னனும் சுவிசேஷத்தை வாஞ்சையுடன் கேட்க ஆரம்பித்தான்.

சோமோ சோமோவின் ஊழியம்:

பீஜீ தீவின் வட பகுதியிலுள்ள சோமோ சோமோவுக்கு ஜாண் தம்பதியினர் அனுப்பப்பட்டனர். இவர்களுடன் ஒரு மருத்துவ மிஷனெரி லைத் என்பவரும் சென்றார். சோமோ சோமோவின் மன்னன் எழுபது வயது நிரம்பிய முதியவர். இவர் மிஷனெரிகளை அன்புடன் வரவேற்றார். உண்மையான அதிகாரம் இவரது மகன் டுக்கிலாகிலாவிடம் இருந்தது. இவன் துஷ்ட மிருகத்தைப் போன்ற குணமுடையவன். தந்தையும் மகனும் மிஷனெரிகளை வர வேற்றதற்கான காரணம் மிஷனெரிகளிடம் இருந்த பொருட்கள், துணிமணிகள், இரும்பு சாமான்க‌ளை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

தொடர்ந்து மொழியை நன்றாகக் கற்றுக்கொண்டு வேதத்தை பீஜீன் மொழியில் மொழிபெயர்க்க ஜாண் ஆரம்பித்தார். அதற்காக அச்சு இயந்திரத்தை இங்கிலாந்திலிருந்து வரவழைத்து, விவா என்ற‌ இடத்தில் அச்சகத்தை நிறுவினார். ஹேனா ஜாண் பெண்கள் மத்தியில் பணிபுரிய ஆரம்பித்தார். பெண்களுக்கென்று மதிப்போ, உரிமைகளோ இல்லாத சமூதாயத்தில் அவர்களுக்கும் ஜீவனுள்ள தேவன் தேவை என்பதை நன்கு உணர்ந்து பணி செய்து, ஆண்டவருக்குள் அவர்களை வழி நடத்தினார். பெண்களில் பலர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டும், மன்னனுக்கும், கணவனுக்கும், தகப்பனுக்கும் பயந்ததால் வெளியே அறிக்கையிடவில்லை.

கொடூரமான டுக்கிலாகிலா ஒருமுறை அதிக சுகவீனப்பட்டான். டாக்டர். லைத் மற்றும் ஜாண் குடும்பத்தாரின் கவனிப்பால் மரணத்தினின்று அவன் பிழைத்து சுகம் பெற்றான். மிஷனெரிகளால் சுகம் பெற்றதால், புதிய விசுவாசிகளைத் துன்புறுத்துவதை அவன் நிறுத்திக் கொண்டான். எனவே விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகியது. இறுதியில் டுக்கிலாகிலா குஷ்டரோகத்தால் பீடிக்கப்ப‌ட்டுத் தனியாக ஒரு குடிசையில் வாழ்ந்தபோது டாக்டர் லைத் மருத்துவ உதவி மற்றும் ஜாணின் கிறிஸ்தவ போதனையால் ஆண்டவரை முழுவதும் ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்று ஒரு கிறிஸ்தவனாக மரித்தான்.

விவா என்னுமிடத்தில் ஒரு மருந்தகம் அமைத்து வியாதியஸ்தர்களுக்கு மருந்து கொடுத்தனர். விவாவில் மட்டுமல்லாமல் பீஜீ‍ன் எல்லா தீவுகளுக்கும் சென்று ஜாண் ஊழியம் செய்தார். அவருடைய உடல் பலவீனப்பட்டாலும் பீஜீ தீவை விட்டுச் செல்ல விரும்பவில்லை. ஊழியத்தில் அவரை அதிகம் எதிர்த்த உள்ளூர் மனிதன் வரானி வேதத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டு ஜாணிடம் ஒருநாள் வந்தார். வேதத்தையும், கிறிஸ்த‌வ விசுவாசத்தையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று ஜாணின் முன் அவன் நின்றபோது, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும் இரட்சிப்பையும் ஜாண் அவனுக்குப் போதித்தார், வரானி சொன்ன பதில் நான் பலரைக் கொன்ற போது அவர்கள் மரணத்திற்கு எப்படிப் பயந்தார்கள் என்று பார்த்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவோ தம்மை முழுமனதுடன் மரிக்கத் தந்துள்ளாரே என்று ஆச்சரியப்பட்டான. ஜாண் சொன்ன நற்செய்தி அவர் உள்ளத்தில் கிரியை செய்ததால் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவனானான்.

மனிதர்களைக் கொண்று தின்பதற்காக இங்கு ஒரு பெரிய கல் உண்டு. அந்த கல் பானை போன்று நடுவில் வெறுமையாக இருக்கும் இதனை நேராக ஆலயத்திற்கு முன் நிறுத்தி ஞானஸ்நானத்திற்காக உபயோகப்படுத்தவேண்டும் என்று வாரானி கேட்டுக் கொண்டான். ஜாணின் ஊழியத்தின் மகுடமாக வாரானின் மனமாற்றம் அமைந்தது.

பீஜீ தீவின் மக்கள் மூட பழக்கம், நரமாமிசம் உண்பதிலிருந்து விடுதலை பெற்று வந்தனர். ஜாணின் உடல் அதிக பலவீனப்பட ஆரம்பித்தது. 1848 அக்டோபர் 9 ம் தேதி தேவனிடம் சேர்ந்தார். 36 வயது நிரம்பிய ஜாண் ஹண்ட் ரிலாவின் பத்து வருடக் கடின உழைப்பிற்குப் பின் மரித்துப்போனார். இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்ட‌ இரும்பு கம்பிகளால் சூழப்பட்ட அவரது எளிய கல்லறை இன்னும் அவரது அர்ப்பணிப்பு ஊழியத்தை உலகிற்குச் சொல்லுகிற‌து. இன்று 90 சதவீதத்தினர் பீஜீ தீவுகளில் கிறிஸ்தவர்கள்.

No comments: