Wednesday, August 11, 2010

ஆத்தும வாஞ்சை, ஆஸ்வால்ட் ஜே. ஸ்மித்

4. உலகம் முழுவதும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுமுன் கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்புவாரா?

"சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்" (மாற்கு 13:10); "இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்" (மதி 24:14). "உலகம் முழுவதும் கிறிஸ்தவ மயமாக மாறுமுன் கிறிஸ்து வருவாரா?" என்று இவ்வதிகாரத்தில் கேட்கிறதில்லை. "சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுமுன் வருவாரா?" என்பதே கேள்வி. ஆகவே நான் சொல்லும் வார்த்தைகளை நன்றாய் கவனியுங்கள்.

சுவிசேஷம் முந்தி அதாவது முதலாவது பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று இயேசு இரட்சகர் ஏன் சொன்னார்? அவர் சொன்னதின் கருத்தென்ன‌?

இவ்வூயியத்தின் முதற்காரணம் அவசரத்தைக் காட்டுகிறது. நாம் எந்த வேலையைச் செய்யுமுன், சுவிசேஷ ஊழியத்தையே முதலாவது செய்யவேண்டும் என இயேசு கிறிஸ்து நமக்குக் காட்டுகிறார்.

இத்தலைமுறை கிறிஸ்தவர்களே இத்தலைமுறை புற மதஸ்தர்களுக்கு உத்தரவாதிகள். இதற்கு முன்னிருந்தவர்களுக்கும், இதற்குப் பின் வருபவர்களுக்கும் நாம் உத்தரவாதிகள் அல்ல. ஏனெனில் அக்காலத்தில் நாம் இருக்க‌ மாட்டோம். அடுத்த‌ த‌லைமுறைக் கிறிஸ்த‌வ‌ர்க‌ளே அக்கால‌ப் புற‌ம‌த‌ஸ்த‌ருக்குப் பொறுப்பாளிக‌ள். ஆக‌வே, இப்போதுள்ள‌ ச‌ந்த‌தியார் சுவிசேஷ‌ம் அறிவிக்காவிடில், இவ‌ர்க‌ளுக்குச் சுவிசேஷ‌ம் ஒருக்காலும் அறிவிக்க‌ ஏதுவிராது.

வயலில் விதைக்கிறவர்களும் அறுவடை செய்கிறவர்களும் அதனதின் காலத்தில் விரைந்து சென்று அந்தந்த வேலை செய்கிறதை நாம் காண்கிறோம். ஏன் அவ்வளவு அவசரம் என்றால், முதுமொழிப்படி பருவத்தே பயிர் செய்ய வேண்டும். காலத்தைத் தவறவிட்டால் ஒன்றும் சேகரிக்க முடியாது. இவ்வண்ணமே கர்த்தருடைய அறுவடையும் இருக்கிறது. அவசரத்துடன் பிரசிங்கிக்காவிடில் இத்தலைமுறை அழிந்துவிடும். "அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது" என்றபடி நாம் சோம்பலாயிருந்தால் நாம் அழுது துக்கப்படவேண்டியதாகும்.

ஏதாவது ஒரு சந்ததி உலகம் முழுவதும் சுவிசேஷத்தைக் கூறி முடிக்க வேண்டும். இத்தலைமுறையிலுள்ள நாம் ஏன் அதை நிறைவேற்றக்கூடாது? நமக்கு மனமுண்டானால் அவ்வாறு செய்ய நம்மாலாகும்.

ஒருவேளை உங்களில் சிலர் "கடந்த 2000 வருடங்களில் நூற்றுக்கு 35 பேர் மட்டும் சுவிசேஷம் கேட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, மீதியாயிருக்கும் சொற்ப வருடங்களில் மீந்த 65 பேருக்கு எப்படி அறிவிக்கமுடியும், இன்னும் 2000 வருடங்கள் செல்லாதா?" என்று கேட்கலாம் நான் அப்படி நினைக்கிறதில்லை. தற்கால நவீன இயந்திர சாதனங்களின் உதவியால் இல்வேலையை இத்த‌லைமுறையிலேயே செய்து முடிக்க‌லாம்.

த‌ற்கால‌ முறைக‌ள் இக்கால‌த்தில் வானொலி ப‌ர‌ப்பும் ஸ்தாப‌ன‌ங்க‌ளை உல‌க‌த்திலுள்ள‌ ப‌ற்ப‌ல‌ இட‌ங்க‌ளில் அமைத்து அவைக‌ளின் மூல‌மாய்ச் சுவிசேஷ‌த்தைப் ப‌ற்ப‌ல‌ மொழிக‌ளில் ஒரே ச‌ம‌ய‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஜ‌ன‌ங்க‌ள் கேட்கும்ப‌டி செய்ய‌ முடியும். முற்கால‌த்தில் இவ்வ‌ள‌வு வேலை ந‌ட‌ந்தேற‌ எத்த‌னையோ வ‌ருட‌ங்க‌ள் செல்லும்.

ம‌ற்றொரு முறை ஒலிபெருக்கிமூல‌ம் பிர‌ச‌ங்க‌ம் செய்வ‌து. வ‌ட‌ ஆப்பிரிக்காவிலுள்ள‌ ஒரு ச‌கோத‌ர‌ன் இம்முறையைக் கையாடி, ப‌ட்ட‌ண‌ம் முழுவ‌தும் சுவிசேஷ‌ம் கேட்கும்ப‌டி செய்தார். அதே முறையை நாமும் பிர‌யோகித்துச் சுவிசேஷ‌த்தை அதி சீக்கிர‌த்தில் ப‌ர‌ப்ப‌லாம்.

வேறொரு முறை இசைத் த‌ட்டுக‌ள்மூல‌ம் செய்யும் சேவை. அந்த‌ந்த‌ நாட்டின் மொழிக‌ளில் சுவிசேஷ‌ம் இசைத்த‌ட்டுக‌ள், இசைநாடாமூல‌ம் ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்க‌ண‌க்கான‌ ஜ‌ன‌ங்க‌ள் கேட்க‌வும், த‌ங்க‌ள் ம‌ன‌தில் ப‌தித்துக்கொள்ள‌வும் ஏதுவாயிருக்கிற‌து.

ஆக‌வே மேற்கூறிய‌ முறைக‌ளால் நாம் சுவிசேஷ‌த்தை வெகு விரைவில் உல‌க‌ம் முழுவ‌திலும் கூறி முடிக்க‌ ந‌ம்மால் கூடும். இன்னும் ஓர் ஆயிர‌ம் ஜாதியார் சுவிசேஷ‌த்தைக் கேளாத‌வ‌ர்க‌ளாயிருந்தாலும், நாம் ந‌ம‌து த‌லைமுறைக்குள் இவ்வேலையைச் செய்து முடிக்க‌க்கூடும் ஏன் நான் எண்ணுகிறேன். இவ்வூழிய‌த்தின் அவ‌ச‌ர‌மே நம்மைத் துரித‌மாய் வேலை செய்ய‌ ஏவ‌வேண்டும். இது எப்ப‌டிப்ப‌ட்ட‌ அவ‌ச‌ர‌மான‌ ஊழிய‌ம் என்ப‌தைச் ச‌பை அறிந்திருந்தால், அநேக‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே உல‌க‌ முழுவ‌திலும் சுவிசேஷ‌ம் அறிவிக்க‌ப்ப‌ட்டிருக்குமே! இதுதான் திருச்ச‌பையின் அதி முக்கிய‌மான‌ வேலை. ஆக‌வே, நாம் எவ்வ‌ள‌வு வேக‌மாய் அதைச் செய்து முடிக்கிறோமோ, அவ்வ‌ள‌வு சீக்கிர‌த்தில் க‌ர்த்த‌ர் த‌ம‌து இராஜ்ய‌த்தை இப்பூமியில் ஸ்தாபிக்க‌ வ‌ருவார். அவ‌ருடைய‌ வ‌ருகையைக் குறித்து வாக்குவாத‌ங்க‌ள் செய்வ‌தினால‌ல்ல‌, சுவிசேஷ‌ வேலை செய்வ‌தினாலே இயேசுவைத் திரும்பி வ‌ர‌ செய்ய‌ முடியும். ஆகையால் "இராஜாவைத் திரும்ப‌ அழைத்துவ‌ராம‌ல் நீங்க‌ள் சும்மாயிருப்பானேன்" என்று கேட்ப‌து அவ‌சிய‌மே.

இர‌ண்டாவ‌து கார‌ண‌ம் இர‌ண்டாவ‌தாக‌, இயேசு கிறிஸ்து பூமிக்கு இராஜ்ய‌பார‌ம்ப‌ண்ண‌ வ‌ருமுன் உல‌க‌மெங்கும் சுவிசேஷ‌ம் அறிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தை அவ‌ர் வ‌ற்புறுத்திக் கூற‌ விரும்பினார். உல‌க‌ முடிவுக்கு முன்னுள்ள‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ஒன்ற‌ன் பின் ஒன்றாய் அவ‌ர் சொல்லிக் கொண்டு வ‌ந்து திடீரென‌ நிறுத்தி "ஆனால் இவைக‌ள் ச‌ம்ப‌விக்குமுன் முத‌லாவ‌து சுவிசேஷ‌ம் உல‌க‌மெங்கும் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌ட‌வேண்டும் அப்பொழுது முடிவு வ‌ரும்" என‌ ம‌த்தேயு சுவிசேஷ‌த்தில் கூறியிருக்கிறார். சுவிசேஷ‌ம் உல‌க‌ முழுவ‌தும் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌ட்ட‌வுட‌ன் இந்த‌ யுக‌ம் முடிவ‌டையும் என்ப‌து தெளிவு.

வேறு வித‌மாய்ச் சொன்னால், இயேசு கிறிஸ்து இப்பூமியில் 1000 வ‌ருட‌ ஆளுகை செய்ய‌ வ‌ருமுன் சுவிசேஷ‌மான‌து ஒவ்வொரு ஜாதிக்கும், பாஷைக்கார‌ருக்கும், ஜ‌ன‌த்துக்கும் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌ரிச‌ன‌த்தில் கூறியிருக்கிற‌ப‌டி ஒவ்வொரு ஜாதியாரிலும் சில‌ராவ‌து மோட்ச‌த்திலிருபார்க‌ள். ஆக‌வே, அவ‌ருடைய‌ சுவிசேஷ‌த்தை நாம் எல்லா ஜாதிக்கும் கூற‌வேண்டிய‌து ந‌ம‌து க‌ட‌மை. அப் 1:8 இல் அவ்வாறே ந‌ட‌க்கும் என‌க் கூறியிருக்கிற‌து.

நாம் க‌ட‌வுளின் கிருபையான‌ சுவிசேஷ‌த்தையும், அவ‌ருடைய‌ இராஜ்ய‌த்தின் சுவிசேஷ‌த்தையும் பிர‌ச‌ங்கித்து வ‌ருகிறேன். க‌ட‌வுளின் கிருபையான‌ சுவிசேஷ‌ம் இயேசு பாவிக‌ளுக்காக‌ ம‌ரித்தார் என்ற‌ ந‌ற்செய்தியே. இராஜ்ய‌த்தின் சுவிசேஷ‌ம் இயேசு திரும்ப‌வும் இராஜ்ய‌பார‌ம்ப‌ண்ண‌ வ‌ருகிறார் என்ற‌ ந‌ற்செய்தியே. இந்த‌ இரு செய்திக‌ளையும் நாம் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌வேண்டும். அப்பொழுது இராஜா திரும்ப‌ வ‌ருவார்.

த‌ற்கால‌த்திலுள்ள‌ தேச‌த் த‌லைவ‌ர்க‌ள் யுத்த‌த்தை நிறுத்த‌வும், த‌ரித்திர‌ம், வியாதி, ம‌ர‌ண‌ம் இவைக‌ளைப்போக்க‌வும் ப‌ல‌ ஏற்பாடுக‌ள் செய்கிறார்க‌ள், ச‌மாதானக் க‌மிட்டிக‌ள்கூடி உட‌ன்ப‌டிக்கைக‌ள் செய்கிறார்க‌ள். ப‌ண‌த்தைச் செல‌வு செய்து நாட்டின் வ‌றுமையைப் போக்க‌ முய‌லுகிறார்க‌ள். இவைக‌ளால் த‌ங்க‌ள் விருப்ப‌ங்க‌ளை நிறைவேற்ற‌லாம் என்று எண்ணுகிறார்க‌ள். இவைய‌னைத்தும் பிர‌யோஜ‌ன‌ம‌ற்ற‌வைக‌ளே.

த‌லைவ‌ர்க‌ள் க‌ட‌வுளின் ஒழுங்கை அறிந்திருப்பார்க‌ளானால், திர‌ள் கூட்ட‌மான‌ மிஷ‌னெரிமார்க‌ளை வெளி நாடுக‌ளுக்கு அனுப்புவார்க‌ள். த‌ங்க‌ள் ஒலிப‌ர‌ப்பு ஸ்தாப‌ன‌ங்க‌ளைக் கிறிஸ்த‌வ‌ ஊழிய‌ர்க‌ள் வ‌ச‌த்தில் ஒப்புவிப்பார்க‌ள். செய்திப் ப‌த்திரிகைக‌ளைச் சுவிசேஷ‌ப் பிர‌ப‌ல்ய‌த்திற்காக‌ உப‌யோகிப்பார்க‌ள். சில‌ வ‌ருட‌ங்க‌ளில் உல‌கிலுள்ள‌ ச‌க‌ல‌ ஆண்க‌ளும், பெண்க‌ளும், பிள்ளைக‌ளும் சுவிசேஷ‌த்தைத் கேட்டு அறியும்ப‌டி அவ‌ர்க‌ள் செய்து விடுவார்க‌ள்.

பின்பு, கிறிஸ்து இப்பூமியில் வ‌ந்து த‌ம் இராஜ்ய‌த்தை ஸ்தாபிப்பார். யுத்த‌ம் ஒழியும். வியாதியும் த‌ரித்திர‌மும் ப‌ற‌ந்துபோம். ம‌னித‌ர் அநேக‌ வ‌ருட‌ங்க‌ள் ஜீவிப்பார்க‌ள். ம‌ர‌ண‌ம் அபூர்வ‌மாயிருக்கும். ம‌னித‌ ஆட்சி முடிந்து க‌ர்த்த‌ரின் 1000 வ‌ருட‌ ஆளுகை ஸ்தாபித‌மாகும். கிறிஸ்து ஏக‌ ச‌க்ராதிப‌தியாயிருந்து நீதியாய் உல‌கை அர‌சாளுவார். ஒருக்காலும் இல்லாத‌ செழிப்பு இருக்கும்.

ஐயோ! பாவ‌ம்! த‌ற்கால‌த்தில் ஆட்சி புரிகிற‌வ‌ர்க‌ள் க‌ட‌வுளின் ஒழுங்கை அறியாத‌வ‌ர்க‌ளாயிருக்கிற‌ப‌டியால், திருச்ச‌பைக்கு அநேக‌க் க‌ஷ்ட‌ங்க‌ள் உண்டு. உல‌க‌ம் சுவிசேஷ‌த்தால் நிர‌ப்ப‌ப்ப‌டாம‌ல் இருக்கிற‌து. கிறிஸ்துவும் அர‌சாட்சி செய்ய‌த் திரும்ப‌ வ‌ராம‌ல் இருக்கிறார். நாம் எப்பொழுது க‌ட‌வுளின் ஒழுங்கைக் காணுங் கால‌ம் வ‌ரும்? நாம் ந‌ம‌து வேலையைச் செய்ய‌த் தீவிரிக்க‌ வேண்டும். இன்னும் எவ்வ‌ள‌வு கால‌ம் அவ‌ர் பொறுமையாய்க் காத்திருப்பார்?

ஒரே ஒரு க‌ட்ட‌ளை இயேசு கிறிஸ்து சுமார் 2000 ஆண்டுக‌ளுக்கு முன், ப‌ர‌லோக‌ம் செல்லுகையில் த‌ம‌து சீட‌ர்க‌ளுக்கு ஒரே ஒரு க‌ட்ட‌ளையைக் கொடுத்தார். "நீங்க‌ள் உல‌க‌மெங்கும் போய்ச் சர்வ‌ சிருஷ்டிக்கும் சுவிசேஷ‌த்தைப் பிர‌ச‌ங்கியுங்க‌ள்." ச‌க‌ல‌ரும் ஒரு முறையாவ‌து கேட்க‌வேண்டும். என்ப‌தே இக்க‌ட்ட‌ளை. நாம் இந்த‌க் க‌ட்ட‌ளைக்குக் கீழ்ப்ப‌டிந்திருக்கிறோமா? இதைச் செய்து நிறைவேற்றியிருக்கிறோமா?

ச‌ரியாய்ச் சொன்னால் அவ‌ர் ந‌ம்மிட‌ம் சொன்ன‌ அந்த‌ ஒரே ஒரு விஷ‌ய‌த்தை ம‌ட்டும் நாம் செய்யாம‌ல், ம‌ற்ற‌ எல்லாவ‌ற்றையும் செய்திருக்கிறோம். க‌ல்லூரிக‌ள், ச‌ர்வ‌ க‌லாசாலைக‌ள், வேத‌க‌லாசாலைக‌ள், வைத்திய‌சாலைக‌ள், அனாதை விடுதிக‌ள் முத‌லிய‌வைக‌ளைக் க‌ட்டும்ப‌டி ந‌ம‌க்கு அவ‌ர் க‌ட்ட‌ளை கொடுக்க‌வில்லை. ஆனாலும், நாம் அவைக‌ளை ஸ்தாபித்திருக்கிறோம். ஆல‌ய‌ங்க‌ள் க‌ட்ட‌வும், ஓய்வு நாள் பாட‌சாலைக‌ள் ந‌ட‌த்த‌வும், வாலிப‌ர் ச‌ங்க‌ங்க‌ளை ஏற்ப‌டுத்த‌வும் அவ‌ர் ஒருபோதும் ந‌ம‌க்குச் சொல்ல‌வில்லை. நான் இவைக‌ளைச் செய்ய‌வேண்டாம் என்று சொல்லுகிற‌தில்லை. இவைக‌ள் தேவைதான்; என்றாலும் அவ‌ர் ந‌ம்மிட‌ம் கூறின‌ அந்த‌ ஒரே ஒரு முக்கிய‌மான‌ காரிய‌த்தை நாம் செய்யாம‌ல் விட்டு விட்டோமே. உல‌க‌ முழுவ‌திலும் சுவிசேஷ‌த்தை நாம் அறிவிக்க‌வில்லையே.

நான் ஒரு ம‌னித‌னை அழைத்து, என் வீட்டிலுள்ள‌ த‌ண்ணீர் குழாய‌ச் செப்ப‌னிடும்ப‌டி க‌ட்ட‌ளையிட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்க‌ள். அவ‌ன் வ‌ந்து என் வீட்டில் வ‌ர்ண‌ம் பூசிக்கொண்டிருப்ப‌தை நான் க‌ண்டால் அவ‌ன் மேல் என‌க்குப் பிரிய‌ம் இருக்குமா? வ‌ர்ண‌ம் பூசுத‌ல் அவ‌சிய‌மானாலும், என் சொல்லுக்கு அவ‌ன் கீழ்ப்ப‌டியாம‌ல், வேறு வேலையைச் செய்கிறானே என்று நான் அவ‌ன்மேல் கோப‌ப்ப‌ட‌மாட்டேனோ? இதைப்போல‌வே ந‌ம‌து காரிய‌மும் இருக்கிற‌து. 'சொன்ன‌தை விட்டுவிட்டு சுரைக்காயைப் பிடுங்குகிற‌வ‌னைப்போல்' இருக்கிறோம். இது அழ‌க‌ல்ல‌.

19 நூற்றாண்டுக‌ளுக்குமுன் த‌ம‌து க‌ர்த்த‌ராகிய‌ இயேசு த‌ம‌து பிதாவின் சிங்காச‌ன‌த்திற்கு ஏறிச்சென்று அவ‌ருடைய‌ வ‌ல‌துபாரிச‌த்தில் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் அவ‌ருக்குச் சொந்த‌மான‌ சிங்காச‌ன‌ம் ஒன்று இருக்கிற‌து? தாவீதின் சிங்காச‌ன‌த்தில் உட்கார‌வேண்டிய‌ இராஜா அவ‌ர்தான். ஆக‌வே, அவ‌ர் திரும்பி வ‌ந்து ஆட்சிபுரிய‌ விரும்புகிறார். அது அவ‌ருடைய‌ உரிமை. பின் ஏன் அவ‌ர் வ‌ராம‌ல் தாம‌த்திக்கிறார்? அவ‌ர் ந‌ம்மிட‌ம் சொன்ன‌தை நாம் செய்யும்ப‌டியாக‌வே காத்திருக்கிறார். அவ‌ர் த‌ம‌க்குள்ளே அடிக்க‌டி சொல்லிக்கொள்ளுகிற‌தாவ‌து: "அவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு கால‌ம் என்னைத் தாம‌திக்க‌ச் செய்வார்க‌ள்? நான் எப்பொழுது திரும்பிவ‌ர‌ அவ‌ர்க‌ள் விடுவார்க‌ள். எவ்வ‌ள‌வு சீக்கிர‌த்தில் நான் என் சிங்காச‌ன‌த்தில் உட்கார்ந்து அர‌சு புரிவேன்!" என்ப‌தே.

ப‌ண்ணை முழுவ‌தும்: இங்கே ஒரு ப‌ண்ணையிருக்கிற‌து. ப‌ண்ணைக்கு எஜ‌மான் அதைத் த‌ன் வேலைக்கார‌ரிட‌ம் ஒப்ப‌டைத்து, நீங்க‌ள் ப‌ண்ணை முழுவ‌தையும் ப‌யிர் செய்ய‌வேண்டும்; நான் தூர‌மான‌ இட‌த்திற்குப் போய்த் திரும்பி வ‌ருவேன் என்று சொல்லிப் போகிறார்.

அவ‌ர்க‌ள் அவ‌ர் வீட்டின‌ருகே ம‌ட்டும் வேலை செய்ய‌ ஆர‌ம்பிக்கிறார்க‌ள். பூந்தோட்ட‌த்தையும், புல் த‌ரையையும் அழ‌குப‌டுத்துகிறார்க‌ள். வேளா வேளைக‌ளில் தோன்றும் க‌ளைக‌ளைப் பிடுங்கி, பூங்காவைப் புதுப்பித்து ந‌ல்ல‌ நிலையில் வைக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ன் எஜ‌மான் கொடுத்த‌ க‌ட்ட‌ளையை நினைவுகூர்ந்து, "நான் வேறு பாக‌த்திற்குப் போகிறேன், ப‌ண்ணை முழுவ‌தையும் ப‌யிர் செய்ய‌வேண்டும் என்று எஜ‌மான் சொன்னாரே" என்கிறான். அவ‌ர்க‌ளோ, அவனைத் த‌டுத்து, "இல்லை, நீ போக‌க்கூடாது; இங்கே க‌ளைக‌ள் ஏராள‌மாயிருக்கிற‌து. நீ எங்க‌ளோடு வேலைசெய்ய‌ வேண்டும்" என்கிறார்க‌ள். அவ‌னோ, அவ‌ர்க‌ளுக்கு இண‌ங்காம‌ல், அப்ப‌ண்ணையின் ச‌ற்று தூர‌மான‌ பாக‌த்திற்குச் சென்று, அதைச் செப்ப‌னிட்டுப் ப‌யிர் செய்கிறான்.

பின்பு வேறு சில‌ர் முந்தின‌வ‌னைப்போல‌வே, எஜ‌மானின் க‌ட்ட‌ளைப்ப‌டி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் த‌டைசெய்தும் வேறொரு பாக‌த்திற்குப் போய் வேலை செய்கிறார்கள். பிற‌கு எஜ‌மான் திரும்பி வ‌ருகிறார். த‌ன் வீட்டின் பாக‌த்திலுள்ள‌ பூந்தோட்ட‌த்தையும் ப‌சும்புல் த‌ரையையும் பார்த்து ம‌கிழ்ச்சி அடைந்தார். அவ‌ர்க‌ளுக்கு வெகும‌திய‌ளிக்குமுன் த‌ன் ப‌ண்ணை முழுவ‌தையும் சுற்றிப் பார்க்க‌ போனார். ம‌ற்ற‌ப் பாக‌ங்க‌ள் எல்லாம் வ‌னாந்த‌ர‌ம்போல் இருக்கிற‌தை அவ‌ர் க‌ண்டு, வியாகுல‌ப்ப‌ட்டு, த‌ன் வேலைக்கார‌ர் ஒன்றுமே செய்ய‌வில்லை என்று அறிந்து கொண்டார்.

க‌டைசியாக‌, ஒரு ம‌னித‌ன் தூர‌த்தில் வேலை செய்கிற‌தைப்பார்த்து, அவ‌ன‌ருகே வ‌ந்து அவ‌ன் வேலைக்கு வெகும‌திய‌ளித்தார். ம‌ற்றோர் ப‌குதியில் இன்னும் இருவ‌ர் ப‌யிர் செய்வ‌தை க‌ண்ணுற்று, அவ‌ர்க‌ளுக்கும் ந‌ல்ல‌ வெகும‌தி அளித்தார். க‌டைசியில் அவ‌ர் த‌ம் வீட்டிற்கு வ‌ந்தார். அங்குள்ள‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌ வெகும‌தி கொடுப்பார் என‌ எதிர்ப்பார்த்த‌ன‌ர். எஜ‌மான் முக‌த்திலோ அதிருப்தி காண‌ப்ப‌ட்ட‌து.

"நாங்க‌ள் உண்மையாய் உழைக்க‌வில்ல‌யா? இதோ பூந்தோட்ட‌த்தைப் பாருங்க‌ள், புல் த‌ரையைப் பாருங்க‌ள்; இவைக‌ள் அழ‌காயில்லையா? நாங்க‌ள் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வேலை செய்ய‌வில்லையா?" என்றார்க‌ள். அத‌ற்கு எஜ‌மான்: "ஆம் நீங்க‌ள் உங்க‌ளால் கூடிய‌ம‌ட்டும் பாடுப‌ட்டிருக்கிறீர்க‌ள் ஆனால் ஒரே ஒரு காரிய‌த்தைக் க‌வ‌னியாம‌ற் போனார்க‌ள், என் சொல்லுக்கு நீங்க‌ள் கீழ்ப்ப‌டிய‌வில்லை. இந்த‌ ஒரே இட‌த்திலேயே திரும்ப‌த் திரும்ப‌ வேலை செய்ய‌ நான் க‌ட்ட‌ளையிட‌வில்லை. ப‌ண்ணை முழுவ‌தும் ஒரு த‌ட‌வையாவ‌து ப‌யிர் செய்ய‌வேண்டுமென‌ நான் க‌ட்டளையிட்டேனே. நீங்க‌ள் அதைச் செய்ய‌வும் இல்லை, அத‌ற்கான‌ முய‌ற்சி எடுக்க‌வும் இல்லை. மேலும் அப்ப‌டிச் செய்ய‌ முற‌ப‌ட்ட‌வ‌ர்க‌ளையும் நீங்க‌ள் த‌டுத்தீர்க‌ள். ஆகையால் உங்க‌ளுக்கு வெகும‌தி கிடையாது" என்று அவ‌ர் சொன்னார்.

இவ்வாறே க‌டைசி நாளில் அநேக‌ர் ஏமாற்ற‌ம‌டைவார்க‌ள். நீயும் இவ‌ர்க‌ளில் ஒருவ‌னாக‌ இருக்க‌லாம். உன்னுடைய‌ ஊரிலே அநேக‌ரை ஆதாய‌ப்ப‌டுத்தியிருக்க‌லாம். உன்னுடைய‌ ச‌பைக்கு நீ உண்மையாய் இருந்திருக்க‌லாம். ஆனால் அந்த‌கார‌த்தில் இருக்கும் புற‌ம‌த‌ஸ்த‌ருக்காக‌ நீ என்ன‌ செய்தாய்? நீ அவ‌ர்க‌ளிட‌ம் செல்ல‌ ஆய‌த்த‌மா? அல்ல‌து உன் ப‌ண‌த்தைக் கொடுத்து உத‌வி செய்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளை அனுப்ப‌ ஆய‌த்த‌மா? நீ அவ‌ர்க‌ளுக்காக‌ வேண்டுத‌ல் செய்கிறாயா உல‌க‌ சுவிசேஷ‌ பிர‌ப‌ல்ய‌த்திற்காக‌ நீ எடுத்துக்கொள்ளும் ப‌ங்கு என்ன‌? நீ க‌ர்த்த‌ரின் க‌ட்ட‌ளைக்குக் கீழ்ப்ப‌டிந்திருக்கிறாயா? நீ சொந்த‌ ஜாதியாரிட‌மே வேலை செய்து திருப்திய‌டைந்து, உல‌க‌த்தில் ம‌ற்ற‌ ஜாதியார் அழிந்துபோக‌ விட்டு விட்டாயா? "ந‌ல்ல‌து, உத்த‌ம‌மும் உண்மையுமுள்ள‌ ஊழிய‌க்கார‌னே, உன் எஜ‌மான‌னுடைய‌ ச‌ந்தோஷ‌த்திற்குள் பிர‌வேசி" என்ற‌ வாழ்த்துத‌லைக் கேட்க‌வும் வெகும‌தியாகிய‌ கிரீட‌த்தைப் பெற‌வும் உன்னாலான‌ ம‌ட்டும் உற்சாக‌த்துட‌ன், ச‌க‌ல‌ ஜாதியாரிட‌மும்போய் சுவிசேஷ‌த்தை அறிவி. அல்ல‌து வெகும‌திய‌ளிக்கும் நாளில் உன‌க்கு ஒன்றும் இராது.

போய் உன் ப‌ங்கைச் செய். நீ போக‌க்கூடாவிடில் ப‌திலாளை அனுப்பு. கால‌ம் ச‌மீப‌ம். நீ செய்ய‌வேண்டிய‌ அலுவ‌ல் இருக்கிற‌து. "ஆகையால், நீங்க‌ள் உல‌க‌மெங்கும் போய்ச் ச‌ர்வ‌ சிருஷ்டிக்கும் சுவிசேஷ‌த்தைப் பிர‌ச‌ங்கியுங்க‌ள்" முந்திச் சுவிசேஷ‌ம் ச‌க‌ல‌ ஜாதியாருக்கும் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப்ட‌வேண்டும் அப்போது முடிவு வ‌ரும் என்ப‌தை ஞாப‌க‌த்தில் வை.

"உம்முடைய‌ வ‌ருகைக்கும் உல‌த்தின் முடிவுக்கும் அடையாள‌ம் என்ன‌?" என்று சீட‌ர்க‌ள் ஆண்ட‌வ‌ரிட‌ம் கேட்ட‌த‌ற்கு உத்த‌ர‌வாக‌ இயேசு என்ன‌ ப‌தில‌ளித்தார்? ம‌த்தேயு 24:3 ஐயும் 14 ஐயும் திரும்ப‌வும் வாசித்துப் பாருங்க‌ள். "இராஜ்ய‌த்தினுடைய‌ இந்த‌ச் சுவிசேஷ‌ம் பூலோக‌மெங்குமுள்ள‌ ச‌க‌ல‌ ஜாதியாருக்கும் சாடிசியாக‌ப் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌டும், அப்போது முடிவு வ‌ரும்? என்றார். ம‌ற்ற‌ச் ச‌ம்பவ‌ங்க‌ள் எல்லாம் அவ‌ர் சீக்கிரம் வ‌ருகிறார் என்ப‌த‌ற்கு அடையாள‌ம். மேற்கூறிய‌ ஒரு ச‌ம்ப‌வ‌மோ உல‌க‌த்தின் முடிவுக்கே அடையாள‌ம். ஆக‌வே "முந்தி" என்ற‌ வார்த்தை (மாற்கு 13:10) இல் கூற‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

இத‌னாலே நாம் அறிவ‌தென்ன‌?

1. இது மிக‌வும் அவ‌ச‌ர‌ம். ஓர் இமைப்பொழுதையும் வீணாக்க‌க்கூடாது. இத‌ற்கே முத‌ல் ஸ்தான‌த்தை நாம் கொடுக்க‌ வேண்டும்.

2. இதுவே க‌ட‌வுளின் ஒழுங்கு. முத‌லாவ‌து உல‌க‌ முழுவ‌தும் சுவிசேஷ‌ம் அறிவித்த‌ல்; அத‌ன்பின் கிறிஸ்துவின் அர‌சாட்சி. ச‌க‌ல‌ ஜாதியாரும் சுவிசேஷ‌த்தைக் கேட்ட‌ பின்பே, அவ‌ர் த‌ன் இராஜ்ய‌த்தை ஸ்தாபிக்க‌ வ‌ருவார். ஆக‌வே, நாம் இளைப்பாறுத‌லைத் தேடாம‌ல் ந‌ம‌து க‌ட‌மையைச் செய்து முடிக்கும‌ட்டும் அதிவிரைவாக‌ இவ்வூழிய‌த்தை நிறைவேற்றுவோமாக‌.

No comments: