Wednesday, August 11, 2010

"மறக்க முடியாத மாமனிதர்கள்"

ஜாண் எலியெட் 1604-1690

ஜாண் எலியெட் என்ற தேவ ஊழியரைப் பற்றி அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெறுத்தொதுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திற்காக அமரிக்கையாக வாழ்ந்து ஆண்டவருக்காக அரிய காரியங்களை அவர்கள் மத்தியில் செய்தவர் இவர். அமெரிக்காவிலுள்ள மசாசுசெட்ஸ் பகுதியிலுள்ள செவ்விந்தியர் நடுவில் மிஷனெரியாகப் பணிசெய்தார். 16ம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டு பிடித்து இங்கிலாந்து தேசத்திலிருந்தும் மற்றும் ஐரோப்பா தேசங்களிலிருந்தும் மக்கள் அங்கு குடியேறிய நாட்கள் அவை. அப்பகுதியில் குடியேறிய வெள்ளையர்கள் அங்கிருந்த பூர்வக் குடிகளான செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகள் எனவும், நாகரீகம் அறியாதவர்கள் எனவும் கூறி வெறுத்தனர். அவர்களை தங்கள் குடியிருப்புகளிலிருந்து ஒதுக்கியும் வைத்து இருந்தனர். அவர்களுடன் பேசுவதை, உறவு வைத்துக்கொள்வதை அருவருப்பாக எண்ணினர். ஏன், ஒருசிலர் அவர்களை பேய்கள் என்று கூட எண்ணினர். வேறு சிலர் வேடிக்கையாக மனித மூளை கொண்ட ஊளையிடும் ஓநாய்கள் என கிண்டலடித்தனர்.

ஆனால் ஜாண் எலியெட்டுக்கோ அந்த செவ்விந்தியர்கள் கடவுளைக் கண்டறிய வேண்டிய தேவையிலிருக்கும் ஆத்துமாக்களாகத் தென்பட்டனர். தேவ அன்பினால் கவரப்பட்டவர்களுக்கு ஏனையோரின் புரத்தோற்றமோ நாகரீகமற்ற அவர்களது செயல்பாடோ அவர்களோடு ஒன்றரக்கலப்பதற்குத் தடையாகிவிட முடியாதே. பாவியாகிய என்னை மீட்க பரலோகம் விட்டு தேவன் இந்த உலகிற்கு வந்தார். நானும் இம்மக்களுக்கு அந்த இயேசுவைத் தர எந்த தியாகத்திற்கும் அஞ்சக்கூடாது என்ற எண்ணம் கொண்டார். எனவே ஜாண் எலியெட் அந்த செவ்விந்தியர்களை நேசித்து அவர்களுடன் நெருங்கிப்பழகி நேசம் காட்டினார். அந்த நேசத்தின் மூலம் ஆத்ம நேசர் இயேசுகிறிஸ்துவை அந்த செவ்விந்தியர்களுக்கு அறிவிக்கத் தீவிரமாய் முயற்சித்தார்.

1604 ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள விட்ஃபோர்டு என்ற இடத்தில் பிறந்த இவர் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஜீசஸ் கல்லூரியில் பயின்றார். தனது பட்டபடிப்பிற்குப் பின் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தன்னுடன் ஆசிரியராக அதே பள்ளியில் பணிபுரிந்த தாமஸ் ஹூக்கர் என்பவர் அவ்வேலையை உதறிவிட்டு அமெரிக்காவிற்கு ஊழியத்திற்காக சென்றார். தாமஸ் ஹூக்கரின் வாழ்வினால் கவரப்பட்டிருந்த ஜாண் எலியெட்டும் அவரைப் பின்பற்றி 1631ம் ஆண்டு அமெரிக்காவிற்கு மிஷனெரியாகச் சென்றார். ஒரு வருடத்திற்குப் பிறகு இவரது நண்பர் ஆனிமம் போர்டும் இவரோடு இணைந்து கொள்ளவே செவ்விந்தியர்கள் மத்தியில் தங்கள் பணியைத் துவக்கினர். செவ்விந்தியரான ஜோப் நெசு என்பவர் உதவியுடன் செவ்விந்தியர்களின் மொழியைக் கற்றுத்தேர்ந்தார். 2 வருடத்திற்குள் செவ்விந்தியருக்கு அவர்களது தாய் மொழியிலேயே பிரசங்கிக்கும் அளவுக்கு மொழி ஞானம் பெற்றார். அவரது மொழிப் புலமை செவ்விந்தியர்களது தாய் மொழியில் வேதத்தை மொழிபெயர்த்துத் தரும் ஆர்வத்தையும் அவருக்கு ஊட்டியது. முதலில் 10 கற்பனைகள், கர்த்தருடைய ஜெபம் ஆகியவற்றை செவ்விந்தியரின் மொழியில் மொழி பெயர்த்தார்.

இதைக் கண்ட ஏனைய ஆங்கிலேயர்கள் இவரைப் பார்த்து சிரித்தனர். இந்த முட்டாள் இந்தியர்களுக்கு நாகரீக பாஷையான ஆங்கிலத்தை கற்றுக் கொடுப்பதை விட்டு விட்டு அவர்களது மட்டமான பாஷையை நீ படிப்பதும் அதில் வேதத்தை மொழி பெயர்ப்பதும் வேடிக்கையாக இருக்கிறது என்றனர். ஆனால் ஜாண் எலியெட் இளக்கரித்துப் போகவில்லை. என் ஆண்டவர் எனது தாய் மொழியில் பேசவேண்டும் என நான் எதிர்பார்க்கும்போது இந்த இந்தியர்கள் மட்டும் அப்படி எதிர்ப்பார்ப்பதில் என்ன தவறு என திருப்பிக் கேட்டார். மேலும் தேவன் தன்னை வேதத்தை அவர்கள் தாய் மொழியில் தரும் இந்தப் பணிக்கே அழைத்திருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்.

சார்லஸ் அருவி அருகில் வாழும் இந்தியர் மத்தியில் பணிபுரிய எண்ணி அப்பகுதியைத் தனது பணிக்களமாக ஏற்படுத்திக் கொண்டார். தங்களது தாய் மொழியில் கடவுளின் அன்பைச் சொல்லும் எலியெட்டின் பிரசங்கம் அநேக செவ்விந்தியரைக் கவர்ந்திழுத்தது.

ஜாண் எலியெட் பணி மூலம் ஒரு கூட்ட மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டனர். அந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கண்ட ஏனைய மக்கள் அப்பகுதியைக் கிறிஸ்தவ நகரம் என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சமூக விரோதச்செயல்கள் அனைத்தையும் நிருத்திவிட்டு தூய்மையுடனும், ஒற்றுமையுடனும் வாழத் தொடங்கியதோடு ஜாண் எலியெட்டுக்கு எல்லாக் காரியத்திலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தனர். ஆங்கிலேய அரசின் சட்டமும் ஆங்கிலேயரின் கெடுபிடியும் சாதிக்கமுடியாத ஒன்றைக் கிறிஸ்துவின் சுவிசேஷம் மூலம் ஜாண் எலியெட் சாதித்துவிட்டார். ஒரு காலத்தில் மனிதப் பிசாசுகள் என்றும், மனிதமூளை கொண்ட ஓநாய்கள் என்றும் ஏனையோரால் அழைக்கப்பட்ட இம்மக்களுக்கு ‘ஜெபிக்கும் இந்தியர்கள்என்ற பெயர் ஏற்பட்டது.

சார்லஸ் நதியோரம் மக்கள் மலர்ச்சி கண்டு விட்டதைத் தொடர்ந்து நாட்டிக்பகுதியில் வாழும் இந்தியரை ஆதாயப்படுத்தும் நோக்குடன் அப்பகுதிக்கு நகர்ந்தார் எலியெட். முதலில் இவரை விநோதமாகப்பார்த்த அப்பகுதியினர் நாளாக நாளாக இவருடன் நட்பாக பழகத் தொடங்கினர். கிறிஸ்துவின் மாதிரியாக வாழ்ந்ததின் மூலம் அம்மக்களின் நெஞ்சிலும் இடம் பிடித்தார். அப்பகுதியில் வாழ்ந்த 800 பேரும் ஜாண் எலியெட்டைத் தங்கள் தந்தையாக எண்ணி மதிக்கத் தொடங்கினர். வேதத்தின் சட்டங்களை அவர்கள் வாழ்க்கையில் கைக்கொள்ளச் செய்து யாவரும் வியக்கும் ஒரு வாழ்க்கையை அவர்களை வாழச் செய்தார். இதனால் நாட்டிக் நகரம் மாதிரி நகரம் என்றானது.

மற்ற ஆங்கிலேயர்களால், புற ஜாதிகள்; வேண்டப்படாதவர்கள் என ஒதுக்கித் தள்ளப்பட்ட செவ்விந்தியர்களை சுவிசேஷத்தால் செதுக்கி சீர்படுத்தி ஒளி வீசும் வைரங்களாக மாற்றி காண்பித்தார் ஜாண் எலியெட். ஆவிக்குரிய வாழ்வில் அவர்கள் உயர வழிகாட்டியது மட்டுமல்லாமல் வாழ்க்கைத் தொழில்களையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். விவசாயம் செய்யவும் மர வேலைப்பாடுகளை நேர்த்தியாகச் செய்யவும் வீட்டைச் சுற்றி கல் தூண்களால் வேலி அமைக்கவும் கற்றுக்கொடுத்தார். நாகரீக வாசனையையும், வாழ்க்கைத் தொழிலையும் அவர்களுக்கு கொடுத்தார். நாகரீக மற்றவர்கள் என்று கருதப்பட்ட நாட்டிக் மக்கள் தாங்களாகவே விவசாயம், மர வேலைப்பாடு போன்றவற்றில் ஈடுப்பட்டார்கள்.

இவரது முக்கிய ஜெபங்களில் ஒன்று “இவர்கள் மத்தியில் பள்ளிகளை ஏராளம் எழுப்பும் ஆண்டவரேஎன்பதாகும். அதன் விளைவு செவ்விந்தியர்களுக்கு என ஒரு கல்லூரியும், பள்ளியும் ராக்ஸ்பரி என்ற இடத்தில் தோன்றியது. இந்தியர்களையே பயிற்றுவித்து ஆசிரியராக ஊழியக்காரராக ஏற்படுத்தினார்.

அதோடு தனது பத்து வருடக் கடின உழைப்பாலும், தந்து உதையாளரான ஜாப்-ன் உதவியாலும் முழு வேதத்தையும் 1659ம் ஆண்டு மொழிபெயர்த்து முடித்தார். அமெரிக்காவிலுள்ள லண்டன் வேதாகமச் சங்கத்தில் முதல் முதலில் ஜாண் எலியெட் மொழிபெயர்ப்பு செய்த செவ்விந்தியருக்கான வேதாகமமே அச்சடிக்கப்பட்டது. இந்திய இலக்கண நூல், இந்தியருக்கான முதல் பாடப்புத்தகம் ஆகிய புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.

ஜாண் எலியெட்டின் 50 ஆண்டுகால ஊழியத்தால் 1100 பேர் கிறிஸ்துவின் அன்பினால் கவரப்பட்டிருந்தனர். 14 கிராமங்கள் மலர்ச்சி கண்டிருந்தது. இரண்டு இடங்களில் ஆலயங்கள் எழுந்திருந்தது. செவ்விந்தியர் மொழியில் வேதாகமம் பிறந்தது.

நாகரீகம் தெரியாதவர்கள், மனித வர்க்கத்திற்கே லாயக்கற்றவர்கள் என்று சொல்லப்பட்ட செவ்விந்தியருக்கு சுவிசேஷ ஒளியை எடுத்துச்சென்று ஏனையோருக்கு நிகராக அவர்களை உயர்த்திவிட்டார் ஜாண் எலியெட், ‘ஜெபிக்கும் மக்கள்எனவும் ‘தேவன் ஆட்சி செய்யும் பூமிஎனவும் பிறர்வியக்கும் வண்ணம் மாற்றத்தை நிகழ்த்திக் காண்பித்தார்.

இந்தியாவிலும் இவ்வித நாகரீகம் தெரியாதவர்கள் என மனிதர்களால் வெறுக்கப்படும் மக்கள் கூட்டம் ஏராளம் இருக்கிறது. அவர்களது வாழ்வும் ஜாண் எலியெட் போன்றவர்களுக்காகக் காத்திருக்கிறது.

No comments: