Wednesday, August 11, 2010

"மறக்க முடியாத மாமனிதர்கள்"

ஜாண் பனியன் 1628 1688.
இங்கிலாந்திலுள்ள பெட்போர்டு என்ற இடத்தில் ஜாண் பனியன் 1628 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். இவரது பெற்றோர் கிறிஸ்தவர்கள் அல்லர். சிறுவயதில் தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களைப் பழுதுபார்த்து விற்பனை செய்யும் தொழிலையே இவரும் தனது தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் உயர்கல்வி பெற இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. வீட்டின் பொருளாதாரத் தேவையைச் சந்திக்க பள்ளிப்படிப்பை இடையிலே விடவேண்டியிருந்தது.


தனது இளம்பிராயத்தில் ஒரு தீய மனிதனாகவே வளர்ந்தார். பொய் சொல்லவும், மற்றவர்களை ஏமாற்றவும், பெரியவர்களை மதிக்காமல் இருந்தார். வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் போகவே தனது 16 வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடம் இராணுவ வீரனாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது இவரது தாயாரும் சகோதரியும் இறந்து விட்டனர். எனவே இவருக்கு வாழ்வில் ஆர்வம் இல்லாமல் போனது. அதோடு ஒருமுறை அரசாங்க ஆணைப்படி, இவர் எல்லையில் நடைபெறும் போருக்குச் செல்லப் பணிக்கப்பட்டார். அதற்கு அவர் ஆயத்தமாகி வரும் நிலையில், கடைசி நேரத்தில் இவருக்குப் பதிலாக வேறொரு நபவர் அனுப்பப்பட்டார். அந்நபர் போரின் முதல் நாளே சண்டையில் மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி ஜாணை அதிகமாகச் சிந்திக்க வைத்தது. மயிரிழையில் தான் உயிர் தப்பினது ஏனோ? என்று சிந்திக்கத் தொடங்கினார்.

இரண்டாண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணியாற்றி திரும்பிய இவர் தனது 19 வது வயதில் ஒரு விசுவாசியான பெண்ணைத் திருமணம் செய்தார். அவள் அடிக்கடி கிறிஸ்துவைப் பற்றி ஜாணிடம் பேசுவாள். அவளைப் பிரியப்படுத்த ஜாண் கோயிலுக்குப் போகவும், சில கெட்ட காரியங்களை விடவும் ஆரம்பித்தார். ஆனால் முற்றிலும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க மனமில்லை. இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரங்கள் பழுதுபார்க்கப்படும் என்று கூவிக்கொண்டே சென்றபோது வழியில் மூன்று பெண்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சொல்லிக்கொண்டிருப்பதை நின்று கவனிக்க ஆரம்பித்தார். அவர்கள் மூலம் சுவிசேஷத்தைக் கேட்ட ஜாண், வீட்டில் சென்று வேதத்தை அதிகமாக வாசிக்க ஆரம்பித்தார். வேதத்தை வாசிக்க வாசிக்க தான் ஒரு பாவி என்று அதிகம் உணர்த்தப்பட்டார். ஒருநாள் அதிக சுகவீனப்பட்டு, சோர்வுடன் இருந்தபோது மார்ட்டின் லூத்தரின் புத்தகத்தைப் படித்தபோது, தன்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்தார்.

ஆண்டவரை ஏற்றுக்கொண்ட சொஞ்ச நாட்களிலே ஜாண் பனியனின் அன்பு மனைவி இறந்துபோனார். அதிக வேதனையுற்ற பனியன் தனது இரட்சகர் மட்டுமே இறுதிவரை தனக்கு உதவி செய்ய முடியும் என்று நங்கு உணர்ந்துகொண்டார். தனது வாழ்வை அவருக்கு சமூலமாய் அர்ப்பணித்து, ஆண்டவருக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய முன்வந்தார். பாத்திரங்களைப் பழுதுபார்க்கும் வீடுகளில் தனது தொழில்ச் செய்து கொண்டே இயேசுவையும் அறிவிக்க ஆரம்பித்தார். இவரது ஊழியத்தின் மூலம் பலர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இவரது வியாபாரமும் நங்கு வளர்ந்தது.

இந்தக் காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் போதகர்கள் தவிர மற்ற எவரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கூடாது என்றொரு சட்டம் இருந்தது. இதனை அறிந்த ஜாண், மாற்கு 16:15 ம் வசனத்தைப் படித்து (நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்) இதற்கு கீழ்ப்படிவதே உன்னதம் என்று உணர்ந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்துவந்தார். சில வருடத்திற்குப் பின் இதே சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு போதகர் அல்லாத வேறு யாராவது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் சிறைச்சாலையில் போடப்பட்டதோடு, கடுமையாகத் தண்டிக்கவும் பட்டனர். ஜாண் நாட்டின் சட்டத்தை மீற விரும்பாவிட்டாலும் தேவனுக்குக் கீழ்ப்படிதலை தனது வாழ்வில் முதன்மையாகக் கருதினார். எனவே தனது ஊழியத்தை அவர் நிறுத்தவில்லை.

ஒருநாள் ஒரு கிராமத்தில் சுவிசேஷத்தை பிரசங்கிக்க மக்கள் இவரை அழத்தபோது, அதனை அறிந்த காவல் துறையினரும் வந்து காத்திருக்க, ஜாண் தனது பிரசங்கத்தை ஆரம்பித்தவுடனே காவலரால் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார். நீதிபதி இவரிடம் இனி சுவிசேஷத்தை பிரசங்கிக்கமாட்டேன் என்று உறுதி கூறினால் உன்னை விடுவிக்கிறேன் என்று கூறினார். ஆனால் அப்படி உறுதியளிக்க ஜாண் பனியன் முன்வரவில்லை. முதலில் 3 மாத சிறைத் தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டது. அதற்கு பதிலுரைத்த ஜாண் பனியன் இன்று நான் விடுவிக்கப்பட்டால், தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன் என்றார். எனவே அவரது சிறையிருப்பு 3 மாதத்தில் முடியாமல் 12 வருடமாக நீடித்தது. இந்த 12 வருடத்தில் எந்த நேரத்திலும் அவருக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. அதாவது நான் இனி பிரசங்கிக்கமாட்டேன் என்ற ஒரே ஒரு உறுதிமொழி அவர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

சிறிய இருண்ட அறையில் 50 பேருடன் இவர் தங்கவேண்டியிருந்தது. இதனால் நோய்கள் வேகமாகப் பரவி பலர் அதே அறையில் மரித்தனர். தனது குடும்பத்தையும் நான்கு பிள்ளைகளையும் பிரிந்து வெளி உலகத்தையே பார்க்காமல் 12 வருடம் சிறையில் கழித்தது கஷ்டமாக இருந்தாலும் ஆண்டவரை அதிகம் நேசித்ததால், அதனை சகித்தார். சிறையில் இவருடன் கொலைகாரர்கள், துஷ்டர்கள் என கிறிஸ்துவை அறியாதவர்கள் இருந்தனர். இவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லி, அநேகரை நீதிக்குட்படுத்தினார். சிறையிலே இவர்கள் கூடி ஜெபிக்க ஆரம்பித்தனர். சிறையில் ஒரு நிமிடமும் வீணாக்காமல் வேத வசனத்தை வாசிப்பது, ஜெபிப்பது, எழுதுவது என்று செலவழித்தார். அங்குதான் அவர் “மோட்ச பிரயாணம் என்ற தனது தலைசிறந்த புத்தகத்தை எழுதி முடித்தார்.

தனது 43 வது வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பெட்ஃபோர்டு என்ற இடத்தில் பாப்திஸ்து திருச்சபையின் போதகராக ஊழியம் செய்ய மக்களால் அழைப்பு பெறவே, அதனை ஏற்று 16 வருடம் அங்கு ஊழியம் செய்தார். சபை போதகராக மட்டுமன்றி பல இடங்களுக்கு பயணம் செய்து, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும், தெருக் கூட்டங்களிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். பல நேரங்களில் மிரட்டப்பட்டதோடு, மறுபடியும் சிறைவாசம் செல்ல வேண்டி இருந்தது. எனினும் சோர்ந்து போகாமல் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். தனது சபை அங்கத்தினர்களின் குடும்பங்களிலுள்ள பிரச்சனைகளை தீர்த்து, அவர்களை கிறிஸ்துவுக்குள் ஊன்றக்கட்டும் பணியிலும் அதிகம் ஈடுப்பட்டார். ஓடிப்போன ஒரு மகனை, அவனது குடும்பத்துடன் சேர்க்கும் பணியில் ஈடுப்பட்டு உழைத்த போது கொட்டும் மழையிலும் கடினமான 40 மைல் பிரயாணம் மேற்கொண்டார். மழையில் அதிகம் நடைந்ததால், சுகவீனப்பட்டு 1688 ம் ஆண்டு ஆகஸ்ட் 13 ம் தேதி, தனது 59-வது வயதில் மரித்து, பூமியில் தான் ஆசையாய் சேவித்த ஆண்டவரை பரலோகத்தில் முகமுகமாய் தரிசிக்கவும் சேவிக்கவும் சென்று விட்டார்.

போதகர் ஜாண் பனியன் இன்று நம்மிடம் இல்லை ஆனால் அவர் உருவாக்கின மோட்சப்பிரயாணம் என்ற புத்தகம் இன்றும் அநேகரை ஆண்டவரண்டை வழி நடத்தி வருகிறது. வேதப் புத்தகத்திற்கு அடுத்தபடியாக 130-க்கும் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இப்புத்தகம் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது. தேவன் தம்முடைய பணியில் பயன்படுத்த தேவை சாமர்த்தியம் அல்ல. ஆனால் அர்ப்பணம். சாமனியர்களைக் கொண்டு சரித்திரம் படைக்கும் ஆண்டவர் உங்களைக் கொண்டும் புதிய சரித்திரம் படைப்பார்.

நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்படாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். ரோமர் 15:21

கிறிஸ்து தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம், நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 3:16

No comments: