Wednesday, August 11, 2010

"மறக்க முடியாத மாமனிதர்கள்"

ஹென்றி புளூச்சோவ் 1677 1747

ஐரோப்பியரின் காலனி ஆதிக்கம் தரங்கையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலம் அது. 86 ஆண்டுகளாக வேரூன்றிய கிழக்கிந்திய வாணிபம்! இந்தியா இவ்வாறிருக்க ஜெரிமானிய தேசத்தில் பக்தி மார்க்கம் பரவிக் கொண்டிருந்தது. புராதான வைராக்கிய மரபு வழிக் கிறிஸ்தவர்களுக்குச் சவாலாக, பக்தி மார்க்க மறுபிரப்பு, மனந்திரும்புதல், வாழ்வு மாற்ற உபதேசம் வலுவடைந்து கொண்டிருந்தது. 1677 ஆம் ஆண்டு ஹென்றி புளூச்சோவ் ஜெர்மனி தேசத்தின் வெசன்பர்க் என்னும் ஊரில் பிறந்தார். பெர்லின் நகரில் ஹாலே கல்விக்கூடத்தில் இவருக்கு இறையியல் கற்றுத்தரப்பட்டது. இப்போது இக்கல்விக் கூடம் மார்ட்டின்லூத்தர் பல்கலைக் கழகம் என அழைக்கப்படுகிறது. அப்போதைய ஆவிக்குரிய தலைவர்களில் ஒருவரான யோயாக்கிம் ஹென்றி என்பவரிடம் இக்கல்வி கற்றார் புளூச்சோவ். வீட்டு வேதபாடக் குழுக்கள் பிரபலமாகிப் பரவிவந்தது. இறையியல் பேராசிரியர்கள் முன்னின்று இதனை நடத்தி வந்தனர். மார்க்கத் தலைவர்கள் இவ்வாறு வேதபாடம் கற்று ஒரே சிந்தையுள்ளவர்களாக வாழ்ந்தனர். இவ்விதமே, சீகன் பால்கும் இங்கு வந்து இறையியல் கற்கவும், இந்த வேதபாட குழுவினரைச் சந்திக்கவும் வாய்ப்பும் பெற்றார். இங்குதான் புளூச்சோவும் சீகன் பால்க்கும் முதன் முதலாக சந்தித்தனர். புளூச்சோவ் இப்போது இறையியல் ஆசிரியராக போதிக்க துவங்கினார்.

நான்காம் பிரட்ரிக் மன்னர் தம் அரசவையின் அங்கீகாரப் பிரசங்கியான பிரான்ஸ் ஜுலியஸ் லுக்கன்ஸ்வாயிலாக, இவ்வாறான தூதுப்பணிக்கு மிஷனெரிமாரைத் தேடக்கட்டளை தந்தார். டேனிஷ் நாட்டினர் இந்தச் சவாலுக்கு அப்போது ஆயத்தமாகவில்லை. ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் தம் நண்பர்களுக்கு இதனைக் கடிதமாக லுக்கன்ஸ் எழுதினார். கிழக்கு இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய (கரிபிய) தீவுகட்களுமான மிஷனெரிப் பணியாளர்களைத் தேடும் படலம் ஆரம்பித்தது. சீகன் பால்க் சபையில் ஆவிக்குரிய தலைவர்கள் ஆலோசனைகளை ஏற்று மிஷனெரியாக தன்னை அர்ப்பணித்தார். லுக்கன்சிடமிருந்து வற்புறுத்தி வந்த கடிதம் மிஷனெரி பணிக்கு செல்ல தேவனுடைய அழைப்பை உறுதிப்ப்டுத்தியது. தன்னுடன் தனது நண்பர் ஹென்றி புளூச்சோவினை வருந்திக் கேட்டு அவரும் சீகன் பால்க்குடன் மிஷனெரிப் பணிக்கு ஆயத்தமானார்.

அடுத்த நாளே பெர்லினிலிருந்து டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகன் வந்து சேர்ந்தனர். இங்குள்ள பேராயர் போர்ன்மேன் இருவரையும் ஆராய்ந்தறிந்தார். மறுபிறப்பு என்றால் என்ன என வினவும்போது தேவக்கிருபையால் மனிதர் தம் வாழ்வில் உள்ளான உயிர்மீட்சி பெறுவது என்றனர். இது அப்போதைய மரபுவழிச் சார்ந்த லுத்தரன் திருச்சபையின் வைதீக மதப்பற்றிலிருந்து வேற்பட்டு, அப்போது பரவி வந்த பக்தி மார்க்க உபதேசமாயிருந்ததாக கண்டதால் இவர்கள் மிஷனெரிப் பணிக்கு தகுதியற்றவர்கள் எனப் பேராயர் கருதினார். ஆனால், மன்னரோ இவர்களை பிரசங்கம் செய்யக்கேட்டு, மனமாற்றம் பற்றிய இவர்கள் தம் கொள்கைகளை மெச்சி, இவர்களை மிஷனெரிகளாக ஏற்க ஒப்புதல் தந்தார்.

1705 ஆம் வருடம் 11 ஆம் நாள் கோப்பன்ஹேகன் பேராலயத்தில் இருவரும் குருத்துவ அபிஷேகம் பெற்று. பின் மிஷனெரிகளாகவும் அங்கீகரிக்கப்பட்டனர். பிரதிக்கினை ஏற்ற மிஷனெரிமார், லுத்தரன் சபை அமைப்பிற்கு ஏற்ப சபை கடமைகளை நிறைவேற்றக் கட்டளை பெற்றனர். டேனிஷ் சபைதனை காலனிகளிலுள்ள ஐரோப்பியரல்லாதோருக்கு அறிவித்து சபை நிறுவுவதைப் பொறுப்பாக ஏற்றனர். 11 அம்சக் கடமைகள், மன்னரது அறிவுறுத்தலாகத் தரப்பட்டது. மன்னரின் ஆணையைப் பெற்ற புளூச்சோவ் மற்றும் சீகன்பால்க், முதல் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு இப்பணியில் அமர்த்தப்பட்டனர். 1705, நவம்பர் 30 ஆம் நாள் இளவரசி சோபி ஹெட்விக் எனும் கப்பலேறினார்கள். இக்கப்பல் மேற்கிந்தியத் (கரீபிய) தீவுகட்கோ, கானா எனும் ஆப்பிரிக்கக் காலனிக்க்கோ செலுத்தப்பட வேண்டும். கடலில் ஏதேதோ சம்பவித்து, திடு திடுவெனத் தரங்கம்பாடி வந்தது கப்பல். அன்று 1706 ஜூலை 9 ஆம் நாள்!

டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மன்னர் மிஷனெரிமாரை அனுப்பும் தம் திட்டத்தில் ஆலோசனை கூட கேட்காததினால் கிழக்கிந்திய கம்பெனியினர் தாங்கள் அவமானப்பட்டதாக எண்ணி மிஷனெரிமார்களைப் பகைத்தனர். ஆதலால் கப்பலின் மாலுமி இவர்கள் இருவரிடத்திலும் நட்புறவுடன் பழகவில்லை. விரோத எண்ணத்தை வைத்திருந்தார். தரங்கையின் கவர்னர் யோகான் ஹஸியஸ் இவர்களை வரவேற்க மறுத்தார்.

ஆயினும் மன்னரது ஆணையும் அவரது கையெழுத்தும் தரை இறங்க அனுமதித்தன. ஆனால் சந்தை வெளியிலேயே நிறுத்தப்பட்டனர்.

யார் எந்த மொழியினைக் கருத்தூன்றிப் பயில்வதென்பதனை தமக்குள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுத்தனர். புளூச்சோவ் போர்ச்சுக்கீசியம் எனவும் சீகன்பால்க் தமிழ் எனவும் ஆயிற்று. அந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அழகப்பன் (46 வயது) என்பவரை தம் உடன் ஊழியராக ஏற்றனர். நவம்பர் மாதத்திலேயே திருச்சபையின் அடிப்படை உபதேசத்தினை தரங்கையில் அவரவர் தெரிந்தெடுத்த மொழிகளில் கற்றுத்தர ஆரம்பித்தனர். இந்த இந்தியரின் சிறு குழுவே இம் மிஷனெரிமாரின் அடிப்படை, மொழி, அறிவுத்தேவை மற்றும் சமுதாயத் தேவகளைச் சந்தித்து வந்தது.

ஆறுமாத காலத்திலேயே தரங்கையில் இவர்கட்குப் பகைமை, வேற்றுமையுணர்வு, தனிமை போன்ற எண்ணங்களில் மாற்றம் உருவாகத் துவங்கியது. ஜெர்மானியப் போர்வீரர்கள் டேனிஷ் ராணுவத்தில் பணியாற்றினார்கள். இவர்கள் 1701 ஆம் ஆண்டிலேயே அங்கு நிறுவப்பட்டிருந்த சீயோன் ஆலயத்தில் ஜெர்மானியம் எனும் தம் தாய் மொழியில் கடவுளை ஆராதிக்க ஆசை கொண்டிருந்தனர். அடிமைகளாகவும், வேலையாட்களாகவும் இருந்த இந்தியர்கள் கவர்னரிடம் இம்மிஷனெரிமாரின் நற்பணிகளை அறிவித்து முரையிட்டனர். இந்தியருக்கும், ஜெர்மானியருக்குமான தனித்தனி சபை ஆராதனை சீயோன் ஆலயத்தில் நடைபெறத் துவங்கியது.

1707, மே 12இல் இவ்வாலயத்தில் 5 போர்ச்சுக் கீசியம் பேசும் இந்தியருக்குத் திருமுழுக்குத் தரப்பட்டது. இது புளூச்சோவுடைய தனிப்பெரும் பிரயாசமோகும். இவர்களைத் திடம்பெற்ற கிறிஸ்தோராக விளங்க புளூச்சோவ் பாடுபட்டார்.

இவ்வாறு பணிவளர, 1708 ஆகஸ்ட் மாதம் தம்மை அனுப்பிவைத்த ஆவிக்குரிய தலைவர்களது சேகரிப்பாக 2000 ராயல் டாலரை கப்பல் சுமந்து வந்தது. கப்பலிலிருந்து கரைக்கு சிறுபடகில் கொண்டு வரும் வழியில் தவறி கடலில் விழுந்து அனைத்தும் தொலைந்துபோனது. மிஷனெரிமார் இச்செய்தி கேட்டு நடு நடுங்கிப்போயினர். கப்பல் மாலுமியோ, தரங்கை கவர்னரோ இதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பியருக்கும், இந்தியருக்கு நற்செய்தி சுமந்து வந்த மிஷனெரிமாருக்கும் இடையே உறவு அற்றுப்போகும் நிலை உருவானது. இந்திய புறமதத்தவர் மிஷனெரிமார் மேல் அனுதாபம் கொண்டனர்.

அடிமைச் சந்தை, அடிமைப் பழக்கம் இந்தியாவிலிருந்த ஐரோப்பியரிடமிருந்தது. டேனிஷ் போதகரான ஒருவர் தம் தாயகம் திரும்பும்போது தம் அடிமை வேலைக்காரப் பெண்ணை வேறொரு லுத்திரன் பெண்ணிற்கு விற்றதை புளூச்சோவ் ஏற்கமுடியாது தவித்தார். அடிமைப் பெண்ணை விடுதலை செய்திருக்கவேண்டும் என முறையிட்டார். மனிதாபிமானமில்லாத செயல் இது என்றார். இந்தியாவிலிருந்த ஐரோப்பியரோ மிஷனெரிமார் மேல் கடுப்பாயிப்போயினர். இவ்வடிமைகள் தொடர்ந்து ஆவிக்குரிய வளர்ச்சி பெற இயலாத நிலையை அறிந்து புளூச்சோவ் நொந்து போனார். டேனிஷ் காலனி ஆதிக்க வர்க்கத்தினர் மிஷனெரிமாரின் புகழ் பிரபலமாவதை விரும்பவில்லை.

சீகன்பால்க் சிறையிலிருந்ததால் புளூச்சோவ் சபையின் நியமனங்களையும் கடமைகளையும் மட்டுமின்றி சீகன்பால்க்கின் பணிகளையும் சேர்த்துக் கவனித்து வந்தார். இப்போது ஜோகனன் குருண்டலர், ஜோகனன் போவ்ங் எனும் இரு மிஷனெரிமார் 1709 இல் வந்திறங்கினர். சிறையிலிருந்து வெளியே வந்த சீகன் பால்க்குவுக்கும், புளூச்சோவ்வுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாயின. நிர்வாகம், இறையியல், அதிகாரம், நிதி பங்கீடு ஆகியனவற்றில் மட்டுமின்றி ஆவிக்குரிய மறுபிறப்பின் அனுபவத்திலும் வேறுபாடு வளர்ந்தது. மிஷனெரி தலைமைத்துவத்திலும் குழப்பம் நிலவியது. நாளைய தினத்தைப் பற்றிய பயமும் பாரமும் இவர்களுக்குள் வர ஆரம்பித்தது. பத்து நாட்கள் கடல் வழியாகப் பயணித்து சீகன்பால்க் சென்னை சேர்ந்தார். புதிய மிஷனெரி போவிங்க் இதற்குள் தம் தாயகம் திரும்பி தந்த அறிக்கையால் தரங்கம்பாடி மிஷனின் குழப்ப நிலை ஐரோப்பாவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. புளூச்சோவ் போர்ச்சுக்கீசிய மற்றும் டேனிஷ் மொழிப் பள்ளிகளை நிறுவிப்பணி செய்து வந்தார். 1711 இல் இருந்த சூழலில், புளூச்சோவ் சென்னை வந்து அங்கிருந்தே தாயகம் செல்ல கப்பலேறினார். சீகன்பால்கு தன் கைப்பட எழுதின “தென்னிந்திய சமுதாயம்எனும் அரிய நூலின் நகலுடன் பயணமானார். ஜெர்மானியில் ஹால்ஸடின் எனுமிடத்திலுள்ள சபை போதகரானார். 1746 ஆம் ஆண்டு தேவ ராஜ்ஜியம் ஏகினார்.

தரங்கம்பாடி முன்னோடிகளில் ஒருவரான புளூச்சோவ் சீகன்பால்க்கின் மூத்த உடன் ஊழியராயிருந்ததுமின்றி சீகன்பால்க் மிஷனெரியாக பொறுப்பேற்கக் காரணமானவராயிருந்தார். தமிழ் மக்களுக்கும், இந்திய திருச்சபைக்கும், உலகளாவின சீர்திருத்தப்பணிகளுக்கும் அடித்தளமிட்ட சீகன்பால்க்கினை அச்சிந்தையில் உருவாக்க கடவுள் பயன்படுத்திய பாத்திரங்களான அவரது தாய், உடன் சகோதரிகள், ஆசிரியர், ஆவிக்குரிய தலைவர்கள், இறையியல் பேராசிரியர், நண்பர்கள், சமுதாய உதவியாளர்கள் என நீண்ட பட்டியலில் புளூச்சோவிற்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது மறக்க முடியாதது. உலகளாவிய இத்திருப்பணியினை தேவன் தரங்கையில் துவங்க தேவ ஆவியானவர் எத்தனையாய் புளூச்சோவையும் பயன் படுத்தியிருக்கிறார். காலத்தின் சுழற்சியில் ஓர் ஊழியர் உன்னத உயரமாய், ஒப்பற்றவராய் ஓங்கி வளர்ந்து விளங்க எத்தனை உடன்பணியாளர் உத்தமமாய் உரமாகி நிற்கின்றனர்! புளூச்சோவ் அதில் முதன்மையானவர்.

வாசித்தவர்கள், யோசிக்கலாமே?

இச்சரித்திரங்களை வாசிக்கும் பொறுப்பாளர்களே! உங்கள் பிள்ளைகளில் மிகச் சிறந்த ஒருவரை தேவனுடைய ஊழியத்திற்கென்று ஜெபித்து, வளர்த்து, உருவாக்கி ஏற்றக் காலத்திலே தேவனின் சேவையில் பொறுப்பெடுக்க அனுப்பிவையுங்கள்.

No comments: