Wednesday, September 1, 2010

ஆத்தும வாஞ்சை - ஆஸ்வால்ட் ஜே. ஸ்மித்




8. தற்காலத்தின் தேவை

"தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்" (நீதி 29:18). இது சத்தியமான வார்த்தை. நாம் கடவுளின் சத்தத்தைக் கேளாதபடியினால் நமது பட்டணங்களிலுள்ள திரளான மக்கள் அழிந்து நாசமாகிறார்கள். நாம் நமது உத்தரவாதத்தை எப்போது உணரப்போகிறோம்?




நாம் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் கொஞ்ச ஜனங்களை நினைத்து திருப்தியடைவது சரியல்ல. நம்மைச் சுற்றியிருக்கும் திரளான ஜனங்களின் மேல் கவலைகொள்ளாமல், அவர்களைக் குறித்து எண்ணமற்றிருப்பது நியாயமா? நாமே அவர்களிடம் செல்லவேண்டும். அவர்கள் நம்மிடம் வரவேண்டுமென்று ஆண்டவர் கட்டளை கொடுக்கவில்லை. ஆகவே குற்றம் நம்மைச் சார்ந்ததேயொழிய அவர்களைச் சார்வதல்ல.

இவ்வுலகத்தார் எண்ணற்ற கவர்ச்சிகளினால் மக்கள் இழுத்துக் கொள்ளப்பார்க்கிறார்கள். சினிமாக்கொட்டகை, நாடக சாலை முதலியவைகள் பட்டணத்தின் முக்கிய இடங்களில் கட்டப்பட்டு வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணைக் கவரத்தக்கதாக இருக்கின்றன. நாமோ நமது ஆலயங்களை ஒரு தெருவின் மூலை முடுக்கில் சிறிதாகக் கட்டி அழகில்லாமல் வைக்கிறோம். 
இப்படியிருக்க ஜனங்கள் நமது ஆலயத்திற்கு வருகிறதில்லை என்று நாம் குறை கூறுவது என்ன நியாயம்? "ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும், இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் ஞானமுள்ளவர்களாயிருக்கிறார்கள்" என்ச் சத்திய வேதம் கூறுவது உண்மையே. ஆகவே ஒவ்வொரு பட்டணத்திலும் தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தைக் கூறும் இடங்கள் ஜனங்களை இழுக்கத்தக்க விதமாயும் எளிதில் வரக்கூடிய இடமாயும், வழியில் போகிறவர்களை இழுக்கத்தக்க அலங்காரமுடையதாயும் இருத்தல் வேண்டும். நாம் இப்படிப்பட்ட காரியங்களில் சிரத்தை எடுக்காமற் போவதினாலேயே புறமதஸ்தர் சீர்கெட்டுப் போகிறார்கள். இவைகளில் நாம் கரிசனை எடுப்பதற்கு நம்மிடம் விசுவாசமும் கடின உழைப்பும் தேவை கடவுளிடம் முழு விசுவாசம் வைத்து, நாமும் அவருக்கென நம்மைத் தியாகம் செய்வோமானால் எல்லாவற்றையும் நாம் செய்ய முடியும். "கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். கடவுளுக்காகப் பெரிய‌ காரியங்களைச் செய்ய முயற்சியுங்கள்" என்பதே கேரி ஐயரின் குறிக்கோள் "விசுவாசிக்கிறவனால் எல்லாம் கூடும்" "தேவனால் எல்லாம் கூடும்" "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்" இவைகளே தேவனுடைய திருவாக்கு. 

தற்கால சபைகளில் எங்கும் விசுவாசதுரோகம் காணப்படுகிறது. அநேகர் விசுவாசத்தை மறுதலித்து விழுந்து போயிருக்கிறார்கள். பட்டம் பெற்ற பல குருக்கள் ஆலயங்களில் நின்று செய்யும் பிரசங்கம் விசுவாச துரோகத்திற்கு ஏதுவாயிருக்கிறது. ஆகவே தேவனுடைய தாசர்கள் சீர்கெட்ட ஆத்துமாவை மாற்ற வல்லமையுள்ள சத்தியங்களைச் சத்தமிட்டுக் கூறவேண்டியது அவசியம் அல்லவா?

"இதோ, இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும் (ஏசாயா 60:2) என்று கூறியிருப்பது உண்மையே. கடவுளின் இரட்சிப்பைக் குறித்த விஷயத்தில் உலகத்திலுள்ள ஜனங்கள் முழுவதும் அந்தகாரத்திலேயே அமிழ்ந்து போயிருக்கிறார்கள் என்பது தெளிவு. சிற்சில ஆலயங்களில் மட்டும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. மறு பிறப்பு, இரட்சிப்பு தெளிவாய்க் காட்டப்படுகிறது. ஜனங்கள் ஆண்டவரிடம் வரும்படி அழைப்புக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அனேக ஆலயங்களில் ஆராதனைகள் வழக்கம்போல் மாமூலாய் மட்டும் நடக்கிறது. சபையார் எல்லாரும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்றும், மோட்சம் போக தகுதியுள்ளவர்கள் என்றும் கருதியே பிரசங்கம் செய்யப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு சபையிலும் மறுபிறப்பு அடையாதவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து சுவிசேஷத்தை எங்கும் பிரசங்கிக்க வேண்டும்.

பன்யன், பேக்ஸ்டர், ஐலீன், எட்வர்ட், வெஸ்லி, ஒய்ட் பீல்டு, பின்னி முதலியவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில், பாவிகள் தங்கள் பாவபாரத்தை உணர்ந்து, நடுங்கிச் சத்தமிட்டனர். கர்த்தர் இப்படிப்பட்ட பிரசங்கிமார்களை நம் மத்தியில் எழுப்புவாராக. இந்தக் கடைசி காலத்தில், பிரசங்கிமார் மற்ற விஷயங்களைக் குறித்துப் பேசுவதைப் பார்க்கிலும், சத்திய வேதத்திலுள்ள மிகவும் முக்கியமும் அவசியமுமான சத்தியங்க்களையே பயமின்றிக் கூறி அறிவிப்பார்களாக. கடவுளின் சுவிசேஷமே இக்காலத்திற்கு இன்றியமையாதத் தேவை.

மிகுதியான நேரம் மூல உபதேசங்களைப் பற்றிய வாக்கு வாதங்களில் செலவழிக்கப்படுகின்றன. தர்க்கங்களால் பயன் ஒன்றும் இல்லை. சத்திய வேதக் கொள்கைகளை நாம் பாதுக்காக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைகளைக் கூறி அறிவிக்க வேண்டியதே நமது காரியம். சத்திய வேதம் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும். அதை எதிர்க்கிறவர்கள் சீக்கிரம் மரித்துப் போவார்கள்; ஆனால் அதுவோ நிச்சயமாய் நிலைத்திருக்கும். வட ஆப்பிரிக்காவில் மார்க்கபேத தர்க்கத்தால் சுவிசேஷ ஒளி அணைந்து போனது. நாம் நம் முறைகளை மாற்றி அமைக்காத பட்சத்தில் நம் தேசத்திலும் அவ்வாறே நடைபெறும்.

நாம் அனைவரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஒரே நோக்கத்தில் ஐக்கியப்பட்டு, ஆவியின் ஒருமைப்பாட்டில் சுவிசேஷத்தை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பிரசங்கிப்போமாக இரட்சிப்புக்கு சுவிசேஷமே தேவபெலனாயிருக்கிறதென்று நாமெல்லாரும் விசுவாசிக்கிறோம். அப்படியானால் அந்தச் சுவிசேஷத்தையே நாம் அறிவிப்போமாக. நாஸ்தீகர் தர்க்கங்களினால் உணர்ச்சியடையமாட்டார்கள்.

சத்திய வேதத்தில் கூறியிருக்கிறபடி நாம் லவோதிக்கேயா சபையின் காலத்திலிருக்கிறோம். ஆக, நமது சபைகளுக்கே சுவிசேஷம் அதிகம் தேவை. உலகத்தை விட்டுப்பிரிந்து இயேசுநாதரிடம் முழுமனதோடு பக்தி வைக்கவேண்டும் என்று நமது சபைகளுக்குப் புத்தி சொல்ல வேண்டும். உலகத்தோடு ஒத்து நடக்கும் ஒரு சபையில் உண்மையாய் மறுபிறப்படைந்த ஒரு மனிதன் தரித்திருக்கக்கூடுமா? சமரசம்பண்ணுதலைத் தேவனுடைய வசனம் கண்டனம் செய்கிறது. அந்தகாரம் அகற்றப்படவேண்டும் ஐக்கியத்தால் விசுவாச துரோக்கத்தை எதிர்க்க வேண்டும்.

சத்துரு நம்மேல் பாய்கிறான். புயல் காற்று அடிக்க ஆயத்தமாயிருக்கிறது. பரிசுத்தாவியானவரின் பலத்தைக்கொண்டு சுவிசேஷத்தை அறிவிப்பதினாலேயே, எதிர்த்து வரும் அலைகளை அமர்த்த முடியும். நாம் ஜனங்களிடம் சென்று சுவிசேஷப் பாட்டுகளைப்பாடி, நல்ல சாட்சி கூறி கிறிஸ்துவின் நற்செய்தி கூறி, கிறிஸ்துவற்ற கூட்டத்தினரை நமது பக்கமாக இழுத்துக் கொள்வோமாக, நாம் ஒரு தெளிவான நல்ல சுவிசேஷ ஒழுங்கைக் கையாடி, ஆத்துமாக்களை ஆண்டவரிடம் வரும்படி ஆதாயம் செய்வோமாக.

நீங்கள் எப்போதாவது நீதி 24:11, 12 ஐ வாசித்திருக்கிறீர்களா? "மரணத்திற்கு ஒப்பிக்கப் பட்டவர்களையும் கொலையுண்ணப் போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி. அதை அறியோம். என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷனுக்கு அவனவன் கிரியைக்குத் தக்கதாக  பலனளியாரே?"

இச்செய்தியை வாசித்து யார் உணர்வடையாமல் இருக்க முடியும்? இது அத்தனை முக்கிய செய்தியல்லவா? மனிதர்களுக்கு வரும் ஆபத்தை நாம் அறிந்தும், அதை அவர்களுக்கு கூறி அறிவிக்காவிடில் அக்குற்றம் நம்மைச் சார்ந்ததே. நமக்கு தெரியாது எனச் சொல்லுவதில் பயன் இல்லை. இவ்விதச் சாக்குப்போக்கைக் கடவுள் ஏற்றுக் கொள்ளார். நாம் சத்தமிட்டுகூறி அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு வரும் ஆபத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்படி நாம் செய்யாதுபோனால் அவர்கள் இரத்தப்பழி நம் மேல் சுமரும்.

என் சகோதரரே, இதுவே இச்சமயத்தில் நாம் செய்ய வேண்டிய ஊழியம். ஜனங்கள் அழிந்து போவதற்கு நாம் உத்திரவாதிகளாகாதபடி கர்த்தர்தாமே இவ்விஷயத்தில் நம்மெல்லாருக்கும் தெளிந்த புத்தியையும் பிரகாசமான மனக்கண்களையும் தந்தருளுவாராக.

No comments: